Home » » சுவிஸ் இல் நடைபெற்ற எழுச்சிக்குயில் 2014

சுவிஸ் இல் நடைபெற்ற எழுச்சிக்குயில் 2014

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த
அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து நடாத்தப்பட்ட தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியான 'எழுச்சிக்குயில் 2014' நிகழ்வானது பேர்ன் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

 ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து நடாத்தப்பட்ட தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியான 'எழுச்சிக்குயில் 2014' நிகழ்வானது 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஆதரவில் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

இளைய தலைமுறையினரிடம் தாயகம் சார்ந்த இன உணர்வை பேணவும், வீரவரலாற்றை நினைவு கொள்ளவும், புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்களின் திறமைகளை ஊக்குவித்து கௌரவிக்கும் முகமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த நடுவர்கள், போட்டியாளர்கள், எழுச்சி இசை வழங்கிய கலை பண்பாட்டுக்கழக கலைஞர்கள், அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் தேசியச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இணைந்து செங்கம்பளம் விரித்த நுழைவாயிலினால் மண்டபத்திற்குள் அழைத்து வரும்போது இருமருங்கிலும் சிவப்பு மஞ்சள் கொடிகளை ஏந்திய மக்கள் உற்சாகமளித்த காட்சி நிகழ்வின் மகுடம்.

தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் முதற்தடவையாக மழலை, சிறுவர், இளையோர்;, வளர்ந்தோர், இணை எழுச்சிக்குயில் போன்ற பிரிவுகளாக நடாத்தப்பட்ட போட்டிகளில் ஆர்வத்தோடு பங்குபற்றிய அறுபதிற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மொழியாற்றலுடனும், இசையறிவுடனும், உணர்வுடனும் எழுச்சிப்பாடல்களைப் பாடிய பாடகர்களுடன், இசைக்கலைஞர்களும் மக்கள் மனதில் நின்றனர்.

போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று 'எழுச்சிக்குயில் 2014' விருதையும், தமிழ் இன அழிப்பின் அவலங்களைத் தாங்கி தமிழகத்தின் தஞ்சையில் அமைந்திருக்கும்; 'முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம்' சென்று பார்வையிடுவதற்கான விமானப்பயணச்சீட்டையும் 'தீயினில் எரியாத தீபங்களே' என்ற தமிழீழ எழுச்சிப்பாடலை பாடிய செல்வி ரம்யா சிவானந்தராஜா அவர்கள் மண்டபம் அதிர்ந்த கரவொலியோடு தனதாக்கிக் கொண்டார்.
பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், ஓவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் நிகழ்வுகள் கனத்த உணர்வுடன் நிறைவுபெற்றன.

இப்போட்டி நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துப் பெற்றோர்கள் போட்டியாளர்களுக்கும், அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளையும் நன்றியன்போடு பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், தமிழர் நினைவேந்தல் அகவமும் தெரிவித்துக்கொள்கின்றது.





 







Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website