Home » , , » ஆட்சியை மாற்ற அமெரிக்கா முயற்சி - கோத்தபாய, தூதரை அழைத்து விளக்கம் ?

ஆட்சியை மாற்ற அமெரிக்கா முயற்சி - கோத்தபாய, தூதரை அழைத்து விளக்கம் ?


இலங்கையில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும்
பொருட்டு அமெரிக்காவின் யூஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவித் திட்டத்தின் கீழ் நடத்தவிருந்த நிகழ்ச்சித் திட்டம், அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. 

'வாக்காளர் கல்வி ஊடாக தேர்தல் ஒத்துழைப்பு' என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்த விரும்பும் சிவில் அமைப்புகள் தங்களின் யோசனைகளை முன்வைக்குமாறு யுஎஸ்எயிட் நிறுவனம் வெளியிட்டிருந்த பத்திரிகை விளம்பரத்தை அடுத்து, அதற்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது. 

தொடர்புடைய விடயங்கள் மனித உரிமை, துஷ்பிரயோகம், போர், போர்க் குற்றங்கள் இந்த சூழ்நிலையில், சிவில் அமைப்புகளுக்கு இன்று வௌ்ளிக்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ள யுஎஸ்எயிட் நிறுவனம், குறித்த நிகழ்ச்சித் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது. 

இலங்கையில் வாக்காளர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது, உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வேலை என்று அமைச்சரவை நேற்று முடிவெடுத்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரை அழைத்து விளக்கம் கேட்க இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிபிசியிடம் கூறினார். 

'ஆட்சியை மாற்ற முயற்சி': கோட்டாபய 

இதனிடையே, இன்று வெளியாகியிருந்த தி ஐலண்ட் நாளிதழுக்கு கருத்து தெரிவித்திருந்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, யூஎஸ்எயிட்-இன் நிகழ்ச்சித்திட்டம் இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி என்று வர்ணித்துள்ளார். 

ஆனால், யூஎஸ்எயிட் நிறுவனம் இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களை நீண்டகாலமாக இலங்கையிலும் மற்றபல நாடுகளிலும் உள்ள சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து நடத்திவந்திருப்பதாக அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார். 

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றமை தொடர்பிலும் அந்த நிகழ்ச்சித் திட்டம் ரத்தாகியிருக்கின்றமை தொடர்பிலும் கருத்து தெரிவிக்க அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் மறுத்துவிட்டார். 

'பல ஆண்டுகளாக நடக்கும் செயற்திட்டம்' 

'இலங்கை மீதான ஐநாவின் விசாரணை காரணமாக அமெரிக்க- இலங்கை உறவில் முறுகல் நிலை' இப்படியான வாக்காளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் 2010-ம் ஆண்டிலிருந்து நடந்துவருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிவில் அமைப்புச் செயற்பாட்டாளர் ஒருவரும் பிபிசியிடம் கூறினார். 

இலங்கையில் பல தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் இவ்வாறான நிதியுதவிகளைக் கொண்டே இயங்குவதாகவும், அரசாங்கம் கூறுவதைப் போல அவற்றால் அரசியல் செயற்பாடுகள் எதுவும் நடப்பதில்லை என்றும் அவர் கூறினார். 

வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தல், வாக்களிப்புக்குத் தேவையான அடையாள ஆவணங்கள் பற்றி தெளிவுபடுத்தல், பெண்களை அரசியலில் ஊக்குவித்தல் போன்ற பணிகளே இந்த செயற்திட்டத்தின் மூலம் நடப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மற்றும் போர்க்கால குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐநா நடத்தவுள்ள விசாரணை காரணமாக இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் முறுகல் நிலையே, அரசாங்கம் யூஎஸ்எயிட் நிகழ்ச்சித் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க காரணம் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத சிவில் அமைப்பொன்றின் பிரதிநிதி கூறினார்.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website