Home » , , » காசே இல்லாமல் சாப்பிடலாம் வாங்க வணக்கம் சொன்னா போதுமாம் !

காசே இல்லாமல் சாப்பிடலாம் வாங்க வணக்கம் சொன்னா போதுமாம் !


வேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே
நிலையம் பக்கத்தில் உள்ளது ஹோட்டல் ஏலகரி. காலை ஏழு மணியில் இருந்து வயதானவர்கள், பெண்கள், மனநிலை சரியில்லாதவர்கள் என்று ஒரு பாவப்பட்ட கூட்டமே வந்து தங்களுக்கு பிடித்த இட்லி, பூரி, தோசை, புரோட்டா போன்றவைகளை வாங்கி உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு பின், கல்லாவில் உட்கார்ந்திருக்கும் கடை உரிமையாளர் நாகராஜிடம் 'காசுக்கு' பதிலாக வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு செல்கின்றனர்.

இது போக நகரசுத்தி தொழிலாளர்கள், கை வண்டி இழுப்பவர்கள் போன்ற எளிய தொழிலாளிகள் மற்றும் மாணவர்களுக்கு உணவு பண்டங்கள் பாதி விலைதான். மேலும் நாள் முழுவதும் கைக்குழந்தையுடன் பால் கேட்டு வருபவர்கள் கையில் காசு இருந்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் பாலை மட்டும் வாங்கிக் கொண்டு செல்லலாம்.

இந்த ஆச்சர்யத்தை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர் நாகராஜ். இதுதான் வாழ்க்கை என்று வாழும் இவரைப்பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்.

ஏலகிரியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான நாகராஜுக்கு ஏழாம் வகுப்பிற்கு மேல் படிப்பு வரவில்லை, குடும்பத்திற்கு பாரமாக இருக்கவேண்டாமே என்று எண்ணி ஓட்டல் தொழிலாளியாகப் போனார். நீண்ட காலம் ஓட்டல் தொழிலாளியாக இருந்ததினால் இந்த தொழில் அத்துப்படியாக, தனியாக ஓட்டல் துவங்கினார். ஹோட்டல் ஏலகிரியில் இட்லி, தோசை, பூரி, புரோட்டா, குஸ்கா என்ற எல்லாமும் ருசியாக கிடைக்கும்.

நாகராஜ் தானே கடைக்கு தேவையான தரமான உணவு பொருளை தேடி வாங்குவதாலும், அதனை தரமான முறையில் தயாரிப்பதாலும், நியாயமான விலையில் விற்பதாலும் நல்ல வியாபாரம் நடக்கும். வருடத்தில் 365 நாளும் இவரது கடை திறந்திருக்கும், இரவில் ஐந்து மணி நேரம் தூங்கும் நேரம் போக மீதம் இருக்கும் நேரம் முழுவதையும் கடையில்தான் செலவழிப்பார்.

இப்படியான சூழ்நிலையில்தான் ஒரு சம்பவம் இவரது கடைமுன் நடைபெற்றது. ரயில் பயணிகள் ஜன்னல் வழியாக காலி குடிநீர் பாட்டிலை தூக்கி எறிவதை போல ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அவ்வப்போது சிலரை தூக்கி எறியாத குறையாக ரயில்களில் இருந்து இறக்கிவிட்டு செல்வர். இப்படி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும், அந்த பெண்களில் பெரும்பாலோனார் மனநிலை சரியில்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களை இப்படி கல்நெஞ்சத்துடன் இங்கே இறக்கிவிட்டவர்கள் ஊருக்கு போனதும் காணாமல் போனாதாக உறவுகளிடம் சொல்லி பொய்யாக தேடிக்கொண்டே இருப்பார்கள். இப்படி இறக்கிவிடப்படும் மன நோயாளிகளின் கதி என்ன? மன நோயாளிகள் ஒரு பாங்கையோ, நகைக்கடையையோ, ஜவுளிக்கடையையோ தாண்டி போகும்போது அவர்களிடம் எந்தவித சலனமும் ஏற்படாது, அதே நேரம் உணவு பண்டங்கள் விற்கும் ஓட்டலையோ அல்லது டீகடையையோ தாண்டிப்போகும்போது உடலும் உள்ளமும் பசி என்ற சலனத்தை ஏற்படுத்த கண்ணில் ஓர் ஏக்கத்துடன் அங்கேயே நின்றுவிடுவார்கள்.

என்னதான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும் பசி உணர்வு இருக்கத்தான் செய்யும், ஆனால் பசிக்குது என்று கேட்கத்தெரியாது. இப்படிப்பட்ட ஜீவன்கள் தனது கடையை ஏக்கத்துடன் பார்ப்பதை அறிந்ததும் பதறிப்போன நாகராஜ், அவர்களை அன்புடன் அழைத்து விருப்பப்பட்டதை சாப்பிடக் கொடுத்தார். நாகராஜ் கையால் நன்றாக சாப்பிட்டுவிட்டு கிடைத்த இடத்தில் தூங்கியவர்கள் மறுநாள் காலையிலும் வந்தனர்.

இந்த முறை வந்த போது தங்களுடன் மேலும் சிலரை கூட்டிக்கொண்டு வந்தனர். சந்தோஷத்துடன் எதிர்கொண்ட நாகராஜ் அனைவருக்கும் அன்புடன் உணவு வழங்கினார். இவர்களைப் பார்த்து சில முதியோர்களும் உடல் ஊனமுற்றவர்களும் கடைக்கு வர இப்படியாக கிட்டத்தட்ட தினமும் நூறு நூற்றைம்பது பேர் காலை உணவு சாப்பிட வாடிக்கையாக ஹோட்டல் ஏலகிரிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

அவர்கள் பாட்டிற்கு வருவார்கள் குட்மார்னிங் போல நாகராஜ்க்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு வேண்டியதை சாப்பிட்டுவிட்டு திரும்ப போகும்போது ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு போய்விடுவார்கள். இதே போல துப்புரவு தொழிலாளர்கள் போன்ற ஏழைத்தொழிலாளர்கள் மற்றும் சீருடையுடன் வரும் ஏழை மாணவர்களுக்கு பாதி விலையில் உணவு இதனால் இரண்டு இட்லி சாப்பிடுபவர்கள் நாலு இட்லி சாப்பிட்டு இன்னும் தெம்பாக, ஆரோக்யமாக இருப்பார்கள் என்பது நாகராஜின் நம்பிக்கை.

எப்படி இதெல்லாம் முடிகிறது என்ற போது எனக்கு பசியோட அருமை தெரியும் ஆகவே என்னால முடிந்த அளவு இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உணவு வழங்குகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக எனது இந்த காரியத்திற்கு பெரிதும் துணையாக இருப்பவர் என் துணைவியார் சுஜாதாதான் என்கிறார் பெருமையாக. அன்றாடம் எங்கள் வீட்டு அடிப்படை செலவிற்கு தேவைப்படும் பணத்தை தவிர மற்ற பணம் அனைத்தையும் இதற்கே செலவழித்து விடுகிறார்.

விசேஷ நாளில் வியாபாரம் நன்கு நடந்து கூடுதலாக லாபம் கிடைத்தால் அந்த லாப பணத்தில் பேனா, பென்சில் என்று வாங்கிக்கொண்டு போய் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிட்டு வந்துவிடுவார். பணத்திற்காக வாழக்கூடாது என்ற கொள்கையில் இருவரும் உறுதியாக இருக்கிறோம், இன்னும் வருமானம் கூடுதலாக கிடைத்தால் மதிய உணவும், இரவு உணவும் கூட வழங்க எணணியுள்ளோம், கடையும், குடியிருக்கும் வீடும் வாடகைதான், பாங்க் இருப்பு எதுவும் கிடையாது, கால்பவுன் தோடும் மூன்று பிள்ளைகளும்தான் எங்கள் சொத்து.

எங்கள் பிள்ளைகளையும் மற்றவர்களுக்கு உதவும் வாழ்க்கைதான் வாழவேண்டும், ஒருக்காலத்திலும் பணத்தின் மீது ஆசை வைக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம். சுஜாதா ஒரு வேலைக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறார், வேலை கிடைத்ததும் அந்த சம்பளத்தில் நமது குடும்பத்தை நடத்திக்கொள்வோம், கடை வருமானம் முழுவதையும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவதிலேயே செலவழிப்போம் என்றும் சொல்லியுள்ளார்.

நாங்கள் செய்யும் இந்த காரியத்தை சேவை தொண்டு என்றெல்லாம் சொல்லி எங்களை பெருமைப்படுத்தி கொள்ள விரும்பவில்லை, பசிக்கும் சக மனிதர்களுக்கு செய்யும் சிறு உதவி அவ்வளவுதான் என்கின்றனர். கடையில் வேலை பார்ப்பவர்கள் பசியோடு வருபவர்களை அலட்சியப்படுத்தி விடக்கூடாது, அவமானம் ஏற்படும்படி பேசிவிடக்கூடாது என்பதற்காக எங்கு இருந்தாலும் காலையில் நாகராஜ் கடைக்கு வந்துவிடுவார்.

தானே அவர்களை வரவேற்று உணவு வழங்குவார். இதற்காக இவர் வெளியூருக்கும் தற்போது போவது கிடையாது, உறவு விசேஷம் என்பதைக்கூட இந்த நேரம் தாண்டிதான் வைத்துக்கொள்கிறார். உங்களோடு சேர்ந்து நாங்களும் சேவை செய்கிறோம் என்றும், ட்ரஸ்ட் ஆரம்பித்து முறைப்படுத்தி செய்யுங்கள் என்றும், எவ்வளவு பணம் வேண்டும் உங்களுக்கு மாதாமாதம் அனுப்புகிறோம் என்றும், நிறைய பேர் சொல்லி வருகிறார்கள் அதை அன்போடு மறுத்து விடுகிறோம்.

காரணம் நாங்கள் எங்கள் போக்கில் எங்கள் மனதிருப்திற்கு ஏதோ செய்கிறோம், பாராட்டு கிடைக்கும், பணம் கிடைக்கும்,உதவி கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்து செய்யவில்லை. ஆகவே எங்களுக்கு நல்ல ஆரோாக்கியமும், இதே போல நியாயமான வருமானமும் வந்தால் போதும் அதை தாண்டி மக்களோட ஆசீர்வாதம் மட்டும் போதும் என்று சொல்லும் இந்த நாகராஜ்.

இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக் கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவாகிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்' நாகராஜ்.

சுஜாதா தம்பதிகளை வாழ்த்த விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய

எண்: 9944565814.

நன்றி- எல்.முருகராஜ்
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website