Home » , , , , , , » 162 பேருடன் பயணித்த ஏர் ஏசியா விமானம் மாயம்

162 பேருடன் பயணித்த ஏர் ஏசியா விமானம் மாயம்

ஏர் ஏசியா விமானம் ஒன்று இந்தோனேசியாவின் சுரபயா
நகரிலிருந்து புறப்பட்ட பின்னர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை இழந்த நிலையில், அதனைத் தேடும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில் 162 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் காளிமாண்டான் பகுதிக்கு மேற்கே, ஜாவா கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது தொடர்பு இழந்தது என்று இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த விமானத்திலிருந்து தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டால் அனுப்பப்படும் சமிக்ஞைகள் எதுவும் வரவில்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் கூறினர். இந்த விமானத்தில் பெரும்பாலும் விடுமுறைக்காகப் பயணித்தவர்களே அதிகம் இருந்ததாகவும் , சிங்கப்பூர் இந்தோனேசியர்களுக்கு பிடித்த விடுமுறைத் தலம் என்பதால் அங்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்றும் ஜாகர்த்தாவிலுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இந்தோனேசிய மற்றும் சிங்கப்பூரின் ராணுவ விமானங்கள் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோனோர் இந்தோனேசியர்கள் என்று தெரிகிறது.

இந்தோனேசிய நகரான சுரபயாவிலிருந்து புறப்பட்ட 45 நிமிடத்துக்குள் இந்த விமானம் விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை இழந்திருக்கிறது. விமானி மோசமான வானிலை காரணமாக விமானப் பாதையை மாற்றுவதற்கு அனுமதி கோரினார் என்றும் ஆனால் விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர். சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயணிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் தகவலறிய குழுமியிருக்கின்றனர்.

குறைந்த விலை டிக்கெட்டுகளை வழங்கும் பட்ஜெட் விமான நிறுவனங்கள் என்றறியப்படும் விமான நிறுவனங்களில் ஒன்று இந்த ஏர் ஏசியா நிறுவனம். மலேசிய நிறுவனமான இதன் இந்தோனேசிய துணை நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த விமானம்.

இந்த நிறுவனத்தின் விமானங்கள் இது வரை பாதுகாப்பாகவே இயங்கி வந்திருக்கின்றன. மலேசியாவுடன் தொடர்புடைய ஒரு விமானம் இந்த ஆண்டு காணாமல் போவது இது மூன்றாவது முறையாகும். 
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website