RECENT NEWS

Latest News

10 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்த கோஹ்லி, ரஹானே

மெல்போர்னில் நடைபெற்று வரும் 3வது டெஸ்டில் சதம் விளாசிய கோஹ்லி, ரஹானே புதிய சாதனையை படைத்துள்ளனர்.


3வது டெஸ்டில் இந்திய வீரர்கள் கோஹ்லி, ரஹானே சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 262 ஓட்டங்கள் குவித்தனர். கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜோடி அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு மண்ணில் ஒரு ஜோடி அதிக ஓட்டங்கள் அடித்ததில் இந்த ஜோடி 4வது இடத்தை பிடித்துள்ளது. 2004ம் ஆண்டு சச்சின்- லஷ்மண் ஜோடி சிட்னியில் 353 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது.

4வது மற்றும் 5வது இடத்தில் களம் இறங்கி இரு வீரர்களும் சதம் அடித்தது இது 4வது முறையாகும். இதற்கு முன் இந்திய வீரர்கள் சவுரங் கங்குலி, சச்சின், லஷ்மண் ஆகியோர் இதுபோல் மூன்று முறை சதம் அடித்துள்ளனர்.அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 1000 ஓட்டங்கள் குவித்த 10வது இந்திய வீரர் கோஹ்லி ஆவார். இவர் இன்றைய சதத்துடன் ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.

‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுப்பது இது 2வது முறையாகும். இதற்கு முன் 1983ம் ஆண்டு அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும்போது இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்களை தாண்டியிருந்தது.

ஒரு தொடரில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 3 சதம் அடித்த இரண்டாவது வீரர் கோஹ்லி. இதற்கு முன் சுனில் கவாஸ்கர் 1977ம் ஆண்டு அவுஸ்திரேலியா தொடரில் மூன்று சதங்கள் அடித்திருந்தார். ஆனால், 4வது வீரராக களம் இறங்கி சதம் அடித்த ஒரே வீரர் இவராவார்.

6 சதங்கள் அடித்து வெளிநாட்டு மண்ணில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோஹ்லி 6வது இடத்தைப் பெற்றுள்ளார். சச்சின் 18 சதத்துடன் முதல் இடத்திலும், கவாஸ்கர் 15 சதத்துடன் இரண்டாவது இடத்திலும், டிராவிட் 14 சதங்களுடன் 4வது இடத்திலும், லஷ்மண் 8 சதங்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

ஒரு தொடரில் 5வது வீரராக களம் இறங்கி 3 முறை அரை சதத்தை கடந்த வீரர் ரஹானே ஆவார். இதற்கு முன் சவுரவ் கங்குலி 5 இடத்தில் களம் இறங்கி 3 முறை அரை சதத்திற்கு மேல் ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

உக்ரைன் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு தயாரான ஜேர்மனி

ஜேர்மனி ஜனாதிபதி அங்கேலா மேர்க்கெல் உக்ரைனை போர் நிறுத்த உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.


கைதிகள் பரிமாற்ற கொள்கையை ஏற்ற ஜேர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல், போர் நிறுத்த உடன்பாடு பேச்சுவார்த்தைக்கு தாமப்படுத்துவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை மேர்க்கெல், உக்ரைன் மீதான நெருக்கடி தொடர்பாக அந்நாட்டு ஜனாதிபதி பெட்ரோ போரோஷெங்கோவிடமும், கசாக் ஜனாதிபதி நுர்சுல்தானுடனும் தொலைபேசியில் பேசியதாக செய்தி தொடர்பாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில், மேர்க்கெல் கைதிகள் பரிமாற்றத்தை வரவேற்பதாகவும், அதில் கிட்டத்தட்ட 150 அரசாங்கத் துருப்புக்களும் 220க்கும் அதிகமான கிளர்ச்சியாளர்களும் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல், சூதாட்டத்தில் அரசாங்கத்துக்கு வருமானம் - மைத்திரி

கடந்த பத்து வருடங்களில் இலங்கையில் எந்த ஒருவர் தேசிய தொழிற்துறையும் உருவாக்கப்படவில்லை என்று எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.



பாலியல் தொழில், சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்றவற்றிலேயே அரசாங்கம் வருமானத்தை ஈட்டி வருகிறது.ஒரு தேசிய தொழிற்துறையேனும் உருவாக்கப்படவில்லை.ஆனால் தமது ஆட்சியில் இலங்கையின் தேசிய தொழிற்துறைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்.அழகான இலங்கையில் அனைத்து மக்களும் நலமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது ஆயுததாரிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இரண்டு வெள்ளை நிற வான்களின் துப்பாக்கிகள், பொல்லு மற்றும் கத்திகளுடன் வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.தே.க.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சாரத்திற்கு பொறுப்பான க.மோகன் தெரிவித்தார்.

இதன்போது இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோது முறைப்பாட்டினை பெற்றுக் கொள்வதில் இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்தபோதிலும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

விழுந்து நொறுங்கியது இந்தோனேசியா விமானம்

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து கிடக்கும் கிழக்கு பெலிடங் கடற்பகுதிக்கு விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசார்னஸ் அமைப்பின் தலைவரான ஜோனி சுப்பெரியாடி பெலிடங் கடற்பகுதிக்கு விரைந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் இணைய செய்தி தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று அதிகாலை 5:20 மணிக்கு சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501, காலை 6:17 மணியளவில் ஜகார்தா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பிலிருந்து விடுபட்டது. இந்த விமானத்தில் 155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களும் இருந்தனர்.

அதில் 16 சிறுவர்களும், 1 குழந்தையும், இரண்டு விமானிகளும், 5 விமான பணியாளர்களும் அடங்குவார்கள். பயணிகளில் ஒருவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் என்றும், 3 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் எனவும், 157 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் மலேசியாவை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

விமான கட்டுப்பாட்டு மையத்துடன் விமானத்தின் தொடர்பு விடுபடுவதற்கு முன், தனது வழக்கமான பாதையில் போவதை விட்டு, வேறு பாதையில் போக அனுமதி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமானம் தொடர்பை விட்டு விலகும் போது கலிமந்தனுக்கும் ஜாவா தீவுகளுக்கும் இடையே ஜாவா கடலில் மேலே 32000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்

தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை, நாகபட்டிணம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சவால் குறித்து பேச்சுவார்த்தை

நிலவும் அசாதாரண காலநிலைக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.


இதற்காக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளையும் கொழும்புக்கு அழைத்துள்ளார்.இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளது.இதற்கிடையில் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 31ம் திகதியுடன் இந்த பணிகள் நிறைவு செய்யப்படவிருந்த போதும், காலநிலை கருதி இதனை 3ம் திகதி வரையில் நீடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website