Home » , , , » வீணை விறகாச்சே!

வீணை விறகாச்சே!


  • பாஞ்சாலி துகிலிழக்க
    பதறிய கண்ணனே!
    ஏஞ்சாமீ? துகிலிழந்த
    எனக்குதவ மாட்டாயா?
  • புலிகண்டால் வயிற்றினிலே
    புளிகரைக்கும் கோழைகளே
    கிலிகொண்டு நிற்கின்ற
    கிளியென்னை பிடித்தவரே!


    சாவுக் கஞ்சி
    சமராடுந் துணிவின்றிப்
    பூவுக்குக் குறிவைக்கும்
    போர்த்தொழில் கற்றவரே!

    ஆடை கிழித்தென்றன்
    அங்கத்தை மொய்ப்பவரே!
    பாடையில் ஏற்றும்முன்
    பதம்பார்க்கத் துடிப்பவரே!

    அம்மணமாய் எனையாக்கி
    ஆனந்தம் கொள்பவரே!
    அசிங்கத்தை அரங்கேற்ற
    ஆரூடம் பார்ப்பவரே!

    வெம்பியழும் எனைக்குதற
    வெறிபிடித்து நிற்பவரே!
    தேம்பியழும் எனைச்சிதைக்க
    தினவெடுத்துச் சூழ்பவரே!

    கைகள் இரண்டிருந்தும்
    கைவிலங்கு பூட்டியதால்
    மெய்மறைக்க முடியாமல்
    மேனி கூசுகின்றேன்!

    தேம்பி அழுதே
    திரள்கின்ற கண்ணீரைத்
    தேக்கி அதிலென்
    தேகம் மறைக்கின்றேன்!

    காற்றையே ஆடையாய்க்
    கட்டப் பார்க்கின்றேன்
    கூற்றையே அழைத்தென்னை
    கூட்டிப்போ என்கின்றேன்!

    உங்களைப்போல் கூற்றிற்கும்
    உள்ளம் கிடையாதோ?
    மங்கை நான்தேடும்
    மரணம்வரத் தடையாதோ?
    எச்சில் இலையாகி
    இழிந்துநான் போகுமுன்
    எமனேறும் எருமையேனும்
    எனைமுட்டிச் சாய்க்காதோ?
    ஈசனோ புத்தனோ
    ஏசுவோ அல்லாவோ
    இச்சமயம் எனைக்காக்க
    இங்குவரக் கூடாதோ?

    பாஞ்சாலி துகிலிழக்க
    பதறிய கண்ணனே!
    ஏஞ்சாமீ? துகிலிழந்த
    எனக்குதவ மாட்டாயா?

    புத்தனுக்குப் பயந்து
    போயொளியப் பார்க்கிறியா?
    குற்றமிழைப் பாரோடு
    கூட்டுச்;சேரப் போகிறியா?

    எச்சில்கள் என்மேல்
    இச்சை கொள்கிறதே!
    ஈழப் புலித்தலைவா!
    இதைத்தடுக்க வாராயா?

    தமிழனாய்ப் பொறந்தா
    தப்பா? அதனினும்
    தமிழச்சி யாய்ப் பொறந்தா
    தண்டனை கற்பழிப்பா?
  • இடுப்பிலே கொம்பு
    முளைத்த விலங்குகள்
    எதிரே வந்து
    எனைமுட்டிச் சாய்க்கிறதே!

    படுக்கைக் கிழுக்கப்
    பலகைகள் நீள்கையிலே
    உடுக்கை இழந்தஎனக்(கு)
    உதவவொரு கையிலையே!
    உள்ளூர் தெய்வங்களோ
    உலகத் தமிழர்களோ
    உள்ளம் பதறலையே!
    ஓடிவந்து தடுக்கலையே!

  • விரியன் பாம்பொன்று
    விழுந்து கடிக்கிறதே!
    சனியன் ஒன்றென்னை
    சாப்பிட்டு முடிக்கிறதே!

    கூவம் ஒன்றிந்த
    கங்கையில் கலக்கிறதே!
    பாவக் கடலொன்று
    புண்ணியத்தை விழுங்கிடுதே!

    இடியே வந்தென்றன்
    மடியில் இறங்கிடுதே!
    நொடியில் என்கற்பு
    நோய்பட்டு இறக்கிறதே!

    கொடிய இருட்டிந்த
    விடியலை மேய்கிறதே!
    கடிய விஷமென்றன்
    காயத்தில் பாய்கிறதே!
    உயிரில்லை என்றாலும்
    உடல்கிடந்து துடிக்கிறதே!
    இதயம் துடிக்கவில்லை
    துடிப்பதுபோல் நடிக்கிறதே!

    தாயே! கண்ணகியே!
    தமிழ்மதுரை எரித்தவளே!
    திருகி முலையெறிந்து
    தீயரைச் சரித்தவளே!

    களையிழந்து கற்பிழந்து
    கதறுமெனக்(கு) உதவாயோ?
    முலையெறிந்து ஊரெரிக்கும்
    மருமத்தை உரைக்காயோ?

    சொல்லால் சுடவும்என்
    சொல்லுக்கு வலிவில்லை
    தள்ளி விடவும்என்
    தேகத்தில் தெம்பில்லை

    கற்பெனும் திண்மையைக்
    கறைபடியச் செய்பவரே!
    அற்புதம் என்றனை
    அற்பமாய்க் கொய்பவரே!

    தட்டிக் கேட்கஎம்
    தலைவன்வராக் காரணத்தால்
    கட்டிப் போட்டென்னை
    கற்பழிக்கும் காமுகரே!

    பூமகள் என்றனைப்
    புலிமகளா? என்பவரே!
    கலைமகள் என்றன்
    களையழித்துக் களிப்பவரே!

    போட்டாப் போட்டியிட்டுப்
    பூந்தேனைச் சுவைப்பவரே!
    தோட்டா ஒன்றால்என்
    உயிர்சுவைக்கக் கூடாதா?

    போச்சு! எல்லாம்போச்சு!
    போகலையே உயிர்மட்டும்!
    ஆச்சு! எல்லாம்ஆச்சு!
    அடங்கலையே இவர்கொட்டம்!

    வீணையை விறகாக்கி
    எரிக்கின்ற வீணர்களா!
    ஓவியத்தைச் சிதைச்சுத்தான்
    ஊரையாளப் போறிகளா?

    அழுக்கை என்மீது
    அப்பிவிட்ட இழுதைகளா!
    சுமையை என்மடியில்
    இறக்கிவைத்த கழுதைகளா!

    இன்னும் பசியெடுத்தா
    என்னோட பிணமிருக்கு!
    கண்ணகிபோல் சினந்தெரிக்க
    கற்பிங்கே எனக்கிருக்கு?

    அகரம் அமுதன்  (2014 தை மாத இதழ்)
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website