கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவரும் என 4 பேர் மரணமடைந்துள்ள அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக சுமார் ஏழு இலட்சம் மக்கள் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்க அதிபர் பிபிசியிடம் தெரிவித்தார். வடக்கே மன்னார் மாவட்டமும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், இதன் காரணமாக அங்கு போக்குவரத்து சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அதன் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவும், படுக்கை விரிப்புகளும் அரசின் நிவாரண அமைப்புகளால் அளிக்கப்பட்டுள்ளன.
எனினும் இதுபோதுமானதாக இல்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
அடை மழை காரணமாகவும், அனுராதபுரத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தோடும் மழை நீர் அங்கிருந்து அருவியாற்றின் ஊடாக மன்னார் மாவட்டத்தை வந்தடைவதனாலும், மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பு வெள்ளக்காடாக மாறியிருக்கின்றது.அருவியாற்றின் நீர் மட்டம் உயர்ந்து, வெள்ளநீர் கரைபுரண்டோடுவதனால் மடு ரோட் பகுதியில் இருந்து முருங்கன் நகரை அண்டிய பகுதி வரை கிராமங்களும் வயல் நிலங்களும் காட்டுப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
0 comments:
Post a Comment